78
-------------------------------------------------------
எழுவத்தெட்டு வயசாச்சு,
எல்லாம் பாத்தாச்சு,
கண்ணு முழிச்சாச்சு,
முழிச்சி என்ன செய்ய?
வேலை வெட்டி ஏதுமில்ல.
கண் பார்வை மங்கலாச்சு.
காதும் இங்கே பொத்தலாச்சு.
தடி ஊண தெரியவில்ல.
நடமாட முடியவில்ல.
நாசமா போன நாக்கு,
என் பேச்சை கேட்கவில்ல.
எனக்கிங்கே சலிப்பாச்சு.
எம் பொழப்பு சிரிப்பாச்சு.
கோவம் தான் அதிகமாச்சு.
யார் மேல கோவம் கொள்ள?
வயசான கோவத்துக்கு,
யார் இங்கே பயப்படுவா?
என் மகனும் அரை கிழவன்,
அவனுக்கு ஆயிரம் வேல.
இடை இடையே என் கவல.
பேரனுக்கும், பேத்திக்கும்.
எனக்காக நேரமில்ல.
மருமகளும் நல்லவதான்
மகள போலாவதான்
அலுவலக வேலையாலே
அவ பொழப்பு நாய் பொழப்பு
என்ன கவனிக்க அவளுக்கு நேரம் எங்க.
அம்பது வருசமா என்னோட கூட்டாளி.
அவதான் என் பொண்டாட்டி.
அவ என்ன சின்ன பொண்ணா,
அப்படியே இருப்பதுக்கு?
கை வலிக்கும், கால் வலிக்கும்,
அவளுக்கும் காச்சல் வரும்.
எனக்கு பொறுமை இல்ல.
அவ நிலைமை புரியவில்ல.
வீட்டு கணக்கெழுதி வீணாச்சு
என் நேரம்.
பத்து முறை எண்ணிட்டேன்,
பத்து ரூபா கொறயுது இன்னும்.
எங்க வீட்டு வேலைக்காரி
என்னப் போல வயசாளி.
எனக்கு இருக்கும் வெறுப்புல
இது வேற இன்னொன்னு
எலி தான் காயுதுன்னா
எலி புழுக்கை ஏன் இங்க
காலையில தெனம் இங்க
கழுத்தருக்க வந்துருவா
மிச்சம் மீதி எல்லாம் இங்க
மொத்தமா அள்ளிடுவா
எங்க வீட்டு வள்ளல் எல்லாம்
அவளோட கட்சி இங்க
ஆள மாத்த இங்கே
ஆயிரம் தடவ சொல்லியாச்சு
சுறுசுப்பா வேல செய்ய
சின்ன பொண்ணா இல்ல இங்க?
எம் பேச்சை எவன் கேப்பான்?
இது என்னோட தலஎழுத்து.
என்னோட பொறந்தவங்க
எல்லோரும் போயாச்சு.
வந்தபோது நான் முந்தி.
இப்போது நான் கடைசி.
அடுத்தது நான்தான்னு,
நிச்சயமா தெரியுதிங்கே,
நடக்கும் போது நடக்கட்டும்.
பத்து ரூபா கிடைக்கல இன்னும்
அதுதான் இப்ப என் கவலை.
Comments
Post a Comment