தேடல் - Micro Story
"ப்ளீஸ், ஸ்டார்ட் தி மெடிடேஷன்" என்று எதிரில் உட்கார்ந்து இருந்த பெரியவர் சொன்னதும், கண் மூடி உட்கார்ந்து இருந்த நான் இதய மத்தியில் உள்ள தெய்வீக ஒளியை தேட ஆரம்பித்தேன். மூன்று மணி நேரம் கிரிக்கெட் போட்டியும், சினிமாவும் முழு கவனத்தோடு பார்க்க முடிகிறது. ஆனால்
ஒரு முப்பது நிமிடம் கண் மூடி உட்கார இயலவில்லை. தியானம் ஆரம்பித்த அடுத்த வினாடி எப்போதும் இல்லாத எண்ண அலைகள் எங்கிருந்தோ வந்து தாக்கத் தொடங்கின. காலிங் பெல் சத்தமும், வீட்டில் உள்ளவர்கள் பேச்சு சத்தமும் தியானம் செய்ய உட்காரும் போதுதான் மிக நன்றாக கேட்கிறது. இந்த
எண்ண அலைகளுக்கு நடுவே தெய்வீக ஒளியை தேடுவது மிகவும் கடினமாக இருந்தது. அடுத்த முப்பது நிமிடங்கள் எப்போது முடியும் என்ற தவிப்பும், தெய்வீக ஒளி தெரிந்த பின் என்ன செய்வது என்கிற நினைப்பும் ஒரு வித பதட்டதை ஏற்படுத்தின. கண் மூடி தியானம் செய்வதும் ஏதோ ஒன்றை அடையும்
நோக்குடன்தானோ? இது கோவிலுக்கு செல்லாமல் செய்யும் பண்ட மாற்று வியாபாரமா? கண் மூடி உட்கார்ந்ததில் முப்பது நிமிடங்கள் போனதே தெரியவில்லை. "தட்ஸ் ஆல் " என்ற பெரியவரின் குரல் கேட்டு கண் திறந்து போது.. "எப்படி பீல் பண்றீங்க?" என்று பெரியவர் கேட்டுக்கொண்டு இருந்தார். என்ன சொல்வது என்று
தெரியாமல், புத்திசாலித்தனமாக ஏதாவது சொல்லவேண்டும் என்று ஆங்கிலமும், தமிழும் கலந்து ஏதோ சில வார்த்தைகள் சொல்லி முடித்தேன். கை கூப்பி வெளியில் வந்து வண்டியில் அமர்ந்ததும்.. செல் போன் பார்த்து மிஸ் கால் செய்த நண்பனை அழைத்து " சாரி டா, மெடிடேஷன் கிளாசஸ்ல இருந்தேன்
அதான் போன் எடுக்க முடியல " என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் செய்த போது ..எதிரே விளம்பரப் பலகையில் இருந்த நடிகை என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது...
Comments
Post a Comment