தனிமை..
காலிங் பெல் சத்தம் கேட்டு கண் விழித்த போது, " அம்மா, தண்ணி கேன் கொண்டு வந்து இருக்கேன் " என்று வழக்கமாக வரும் ஆள் நின்று கொண்டு இருந்தான். டிவியில் சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது, யாரோ யாரையோ பழி வாங்க வேண்டும் என்று ஒரு தடிமனான பெண் கண்களை உருட்டி வசனம் பேசிக்கொண்டு இருந்தாள்.. வந்த ஆள் தண்ணி கேன்களை வைத்துவிட்டு நகர்ந்த போது மணி காலை
பதினொன்று. டிபன் சாப்பிட்டு விட்டு ஓய்வு நாற்காலியில் உட்கார்ந்ததுதான் ஞாபகம் இருந்தது சாந்தா அம்மாவிற்கு... இந்த ஜனவரியோடு கணவன் இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. சிரோசிஸ் லிவர் வந்து நான்கு வருடம் அவஸ்தை பட்டு போன வருடம் , மூன்று நாள் நினைவு இழந்து அமைதியாக இறந்து போனார். அவர் இருந்த வரை அவரை கவனிப்பதிலேயே பாதி நேரம் போய் விடும். மனதில் ஒரு தைரியம் இருந்தது, வாழ்கையில் ஒரு பிடிப்பு இருந்தது. கடந்த ஒரு வருடமாக ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது.
இவள்தான் என் அம்மா. அப்பாவின் மறைவு அவளை மெல்ல அமைதியாக்கியது. பேச்சில் ஒரு கனிவும், பேரன், பேத்திகளின் நினைவும், கவலையும் அதிகமாகியது. தனக்கு என்று ஒருவர் இல்லை என்பது அவள் பேச்சில் தெரிந்தது. கடைசி காலத்தை பற்றிய பயம் கண்களில் தெரிந்தது. அம்மாவை இப்போதெல்லாம் பார்க்கும் பொழுது தேவை இல்லாமல் அவளுடன் போட்ட சண்டைகள், செய்த விவாதங்கள் மனதை நோகடித்தது வருத்தம் அளிக்கிறது. தனிமை , முதுமையில் தனிமை, சுற்றம் எல்லோரும் இருக்கும் பொழுதும் தனிமையாக உணர்வது மிகவும் கொடுமையாக இருக்குமோ.. தினமும் காலையில் எழுந்து அதே டிவி சீரியல், அதே சுலோகம் சொல்வது, வரிசையாக எல்லோருக்கும் போன் செய்து பேசுவது, இது எல்லாம் ஒரு இரண்டு மணி நேரத்தில் முடிந்து விட்டபின், சிறிது தூக்கமும் பிறகு பழைய நினைவுகளை அசை போட்டபடி எஞ்சிய பொழுதை கழிக்க வேண்டியுள்ளது... மெல்ல சாவது என்பது இதுதானோ? பெரிய குடும்பத்தில் பிறந்து, பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, மூன்று பிள்ளைகளை பெற்று, வளர்த்தவளுக்கே இப்படி என்றால், பிரிந்து வாழும் இன்றைய தலைமுறையின் முதுமை எப்படி இருக்கும்? இந்த தெளிவு நார்ப்பது வயதில் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.. தெளிய, தெளிய அமைதி பிறக்கும். தேவை இல்லாத எதுவும் தூக்கி எரியப்படும், மதிப்பு இழந்து போகும், மனிதர்கள் உட்பட...
Comments
Post a Comment