கிருஷ்ணார்பணம்..

"இனிமேல் எல்லோரும் வழக்கம் போல எல்லா பண்டிகையும் செஞ்சிக்கலாம், எல்லா கோவிலுக்கும் போகலாம், மொதல்ல உங்க குல தேய்வ கோவிலுக்கு குடும்பதோட போய்ட்டு வாங்கோ.. நான் அப்ப கிளம்பறேன், சந்தோஷம்...!! " என்று சொல்லிவிட்டு சாஸ்திரிகள் கூட வந்த சிஷ்யர்களோடு தட்சினை இத்யாதிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்று விட்டார்.  ஹாலில் வைத்து இருந்த படத்தில் அப்பா இன்னும் சிரித்துக்கொண்டு இருந்தார். அப்பா இறந்து ஒரு வருடம் முடிந்து செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் செய்து முடித்து விட்டு, கடைசியாக நவக்ராஹ ஹோமத்துடன் செய்து முடித்தாகிவிட்டது.  அப்பாவின் பயணம் இத்துடன் முடிந்ததாக சாஸ்திரிகள் சொல்கிறார். வேறு ஒரு இடத்தில் அந்த உயிர் ஜனனம் எடுத்து இருக்குமோ? இல்லை இன்னும் இங்கேயே இருக்குமோ? ஒரே குழப்பமாக இருந்தது. இனிமேல் ஒவ்வொரு அம்மாவாசை தினம்தான் அப்பாவின் நினைவு வருமோ? நாள் பட நாள் பட அதுவும் குறையுமோ...? சர்வம் கிருஷ்ணார்பணம்!  என்று சொல்லி சீக்கிரம் எள்ளும் தண்ணியும் விட்டு விட்டு வேறு வேலைக்கு ஓட நேருமோ?அடுத்தவர் மரணம் மெல்ல மறக்கும், துக்கம் மெல்லத் தொலையும்,  தன் மரணம் பற்றிய கவலை தோன்றும்..எனக்கும் தோன்றியது.. ஒவ்வொரு முறையும் பிண்டம் கரைத்த போதும், முட்டிக் கால் மடக்கி அண்ணாவுடன் பிராமணன் இலையில் உணவு இட்டு நெய் வார்த்த போதும்,  இந்த நினைவு அதிகரித்தது. ஒவ்வொரு அம்மாவாசையும் என் தந்தையும், தாத்தனும், பாட்டணும் என் வாசல் வந்து நான் விடும் எள்ளும் தண்ணியும் ஸ்வீகரிப்பது போல், நான் எங்கு போய் நிற்பேன்...? யார் எனக்கு எள்ளும் தண்ணியும் உண்ண அளித்து வழி அனுப்புவர். முதன் முறையாக, ஆடிய ஆட்டம் அனைத்தும் நினைவில் வந்தது... இளமையின் திமிர் எச்சில் உமிழ்ந்தது...  இனி இந்த நினைவு ஒவ்வொரு அம்மாவாசையும் வரும்... வரும்  போது பார்த்துக் கொள்ளலாம்.... 🙏🙏  சர்வம் கிருஷ்ணார்பணம்..

Comments

Popular posts from this blog

5th Oct 21