அடியேன்
இந்த பொங்கல் வந்தால் ஐம்பத்து ஐந்து வயது கடந்து விடும். கொடிக் கம்பத்தின் கீழ் சற்று இளைப்பாரலாம் என உட்காந்தவருக்கு வயதின் ஞாபகம் ஏன் சட்டென்று வந்தது என தெரியவில்லை. முன் நெற்றி வியர்வையை துடைத்தபடியே யோசித்த போது பதினைந்து,பதினாரு வயதில் அப்பாவுடன் முதலில்கட்சி கூட்டத்திற்கு போனது நினைவு வந்தது.. தலைவர், தலைவர் என்று அப்பா ஓடியது, கொடி கட்டவும், ஆள் சேர்க்கவும் அலைந்ததும் நேற்று போல் உள்ளது. அப்பாவிற்கு பிறகு இவர். தலைவரின் மொழிப் பற்று , தலைவரின் பேச்சு, சொன்ன உண்மையான பொய்கள் அனைத்தும் கவர்ந்தது. மாணவர் அணி, இளைஞர் அணி என்று படிப் படியாக முன்னேறியதில் படிப்பு பாழானது..தலைவர் முன்னிலையில் திருமணமும் , பிள்ளைக்கு தலைவன் பெயர் வைத்ததும் தவிர வேறு ஒன்றும் பெரிதாய் நடக்கவில்லை . கூட்டதுடன் ஓடி ஓடி, ஒன்றும் புரியாமல் கோஷமிட்டு தலைவன் அழைப்பை ஏற்று போராடி அடிவாங்கியதுதான் மாறி மாறி நடந்தது . இன்னும் ஒரு கவுன்சிலர் பதவி கூட பிடிக்க முடியவில்லை. இது ஒரு மாதிரியான போதை, புலி மேல் செய்யும் சவாரி. நேரம் ஆக ஆக மீள்வது கடினம்.கரை வேட்டியும் அது தரும் போதையும் மற்றவர்களுக்கு புரியாது.
வாழ்கையை வீணடித்து விட்டோமோ என்ற நினைவை பைக் சத்தம் கலைத்தது. "என்னா இங்க ஒக்காந்துனுகிற, அண்ணன் கட்சி ஆபீஸ்க்கு வர சொல்லிச்சி, வரல?" என்று அழைக்க, ஒரு வருங்காலம் வண்டி ஓட்ட இறந்த காலம் பின்னால் உட்கார்ந்து சென்றது.. சாலையின் மறுபுறம் ஆளுயற கட் அவுட்டில் தலைவர் ஏழைகளுக்கு இலவச
வேட்டியும், சேலையும் பரிசளித்துக்கொண்டு இருந்தார்...
"குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான் " என்ற பழைய வாக்கியம் அச்சடிக்கப் பட்டு இருந்தது..
Comments
Post a Comment