பயணம்
கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. எழுபத்தி ஐந்து வருடமாக ஒரே இடத்தில் இருந்தாகி விட்டது. இந்த வீடு இரண்டு வருடமாக கொஞ்சம் கொஞ்சமாக சிதிலம் அடைந்து கொண்டு இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப வேண்டும் என்பது கட்டளை..கிளம்ப கடந்த இரண்டு நாட்களாக ஆயத்தம் செய்தாகி விட்டது. இரவு 11.58 க்கும் 11.59 க்கும் இடைப் பட்ட நேரத்தில் விலகி 6 அடி உயரத்தில் மிதந்து கொண்டு இருந்த போது, 75 வயது சர்தார்ஜியின் மனைவியும்,மகனும் பெரும் குரல் எடுத்து அழுது கொண்டு இருந்தனர்.. அக்கம் பக்கத்தில் உள்ள பிளாட்களில் இருந்தவர்கள் வந்து "க்யா ஹுவா ", கப் ஹுவா என்று விஜாரித்துக் கொண்டு இருந்தனர். முன் வழுக்கை தலையோடு ஸ்வெட்டர் அணிந்த ஒரு முதியவர் " வாட் ஹேப்பன்ட், ஷுட் வி கால் டாக்டர் " என்று ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டு இருந்தார்.
மெல்ல, மெல்ல செல் போன்களில் செய்தி தெரிவிக்கப் பட்டது. மிதந்து கொண்டு இருந்த அது நடப்பது அத்தனையும் கவனித்துக் கொண்டு இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உறவினர் வர தொடங்கினர்.. உடலை ஹாலில் கிடத்தி, மகன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் சூடான சாய் எல்லோருக்கும் பரிமாறப் பட்டது.. ஜனவரி குளிருக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. எப்படி இறந்தார் என்பதை மகன் அனைவருக்கும் சொல்லிக் கொண்டு இருந்தான்.. இன்னும் கொஞ் நாட்கள் இதையே சலிக்கும் வரை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். மிதந்து கொண்டு இருந்து எனக்கு இன்னும் கட்டளை வரவில்லை. அடுத்த இடம் எங்கு என்பதும் தெரியவில்லை. ஆணோ, பெண்ணோ, அலியோ, விலங்கோ, பறவையோ, எங்கு குடி புக வேண்டும் என சொல்லப்படவில்லை.. அதுவரை மிதந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்..
Comments
Post a Comment