"...............பரசுராமனாகிய நான் "
கடைசியாக ஒரு முறை கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டான் பரசுராமன். வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் கருப்பு நிற தோல் நிறத்திற்கு கச்சிதமாக இருந்தது. கொஞ்சம் நெருங்கி கண்ணாடி முன் சென்று மீசையை உற்றுப் பார்த்து இரண்டு பக்கமும் சரியாக உள்ளதா என பார்த்துக் கொண்டான். ஒரு ஓரமாக இருந்து ஒற்றை வெள்ளை முடியை சாயம் பூசி சரி செய்ய வேண்டும் என மனதில் ஓடியது. கட்டை விரல் அளவு விபூதி எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டபின், கொஞ்சம் ஜவ்வாது எடுத்து தண்ணீரில் நனைத்து காதோரமும், கொஞ்சம் கழுதிலும் தடவிக் கொண்டான். "பரசுராமன் என்னும் நான் " என்னும் வாசகம் எப்போதும் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. இந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய அடி வாங்க வேண்டி இருந்தது. தனக்கு என்று ஒரு இடமும், தன்னை சுற்றி ஒரு கூட்டமும் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் கடினம். "தமிழ்", இந்த மொழியின் வலிமையை, அது ஏற்படுத்தும் தாக்கத்தை, அது எப்படி உணர்ச்சி வசப்பட வைக்கும் என்பதை இளம் வயதிலேயே நன்கு அறிந்தது மிகப் பெரிய பலமாக அமைந்தது. உணர்ச்சி வசப்படும் கூட்டம் நன்கு யோசிக்காது எனற தந்திரம் மிக விரைவில் பிடி பட அடுத்த அடுத்த நகர்வுகள் எளிதாக இருந்தன.
கூட இருந்த அனைவருக்கும் இந்த கனவு இருந்தது. நன்கு படித்து வாழ்கையில் முன்னேறுவதில் உள்ள உழைப்பை விட இது எளிதாக தோன்றியது. அதீதமான அன்பும், நட்பும், அக்கறையும், மரியாதையும் போலி என்று தெரிந்தும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.. எப்படி புதிய அடை மொழி கொண்டு அழைக்கலாம், எப்படி பரசுராமனின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற போட்டி எப்போதும் அந்த கூட்டத்திற்கு இருந்தது.
அறையை விட்டு வெளியே வந்த பரசுராமனை அனைவரும் சூழ்ந்து கொண்டனர். வெளியே கேள்வி கேட்க ஒரு கூட்டம் காத்து கொண்டு இருந்தது.
கூட இருந்த கூட்டத்திற்கும், கேள்வி கேட்க காத்திருந்த கூட்டதிற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. எந்த எலும்பு துண்டு யாருக்கு வீச வேண்டும், என்பது பரசுராமனுக்கும், எந்த கேள்வி கேட்டால் எலும்பு துண்டு கிடைக்கும் என மற்றவர்களுக்கும் பரஸ்பரம் தெரிந்து இருந்தது.
சாலையில் செல்லும் ஜனங்களுக்கு இதை பற்றிய அக்கறை எதுவும் இருந்ததாக தெரிய வில்லை.. ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒரு தாய் ஸ்கூட்டியில் பள்ளியில் இருந்து குழந்தையை அழைத்துச் சென்று கொண்டு இருந்தாள் .. டீ கடையில் பைக் ஸ்டாண்ட் போட்டு விட்டு, டை கட்டி இருந்த மூன்று இளைஞர்கள் கையில் சிகரெட்டுடன் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அருகில் உள்ள பிளாட்டில் இருந்து ஒரு வயதான அம்மா "செக்யூரிட்டி, மோட்டார் ஆன் பண்ணுப்பா, டேங்க்ல தண்ணி தீர்த்து போச்சு " என்று சொல்ல அந்த வயதான செக்யூரிட்டி மோட்டார் ஆன் செய்து விட்டு, தலை குனிந்து மொபைல் போனில் ஏதோ பார்த்து தனக்கு தானே சிரித்துக் கொண்டு இருந்தான். டிவிஸ் பிப்டியில் குடுமி வைத்த சாஸ்திகள், மேல் அங்கவஸ்திரம் காற்றில் பறக்க எங்கேயோ ஹோமத்திற்கு வேகமாக சென்று கொண்டு இருந்தார். இலவச பஸ்சிற்காக சில பெண்மணிகள் காத்திருந்தனர். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடிப்பது போல் வாழ்கை அனைவருக்கும் நகர்ந்து கொண்டு இருந்தது.
கேள்வி பதில், சொன்னபடியே முடிய, பரசுராமன் ஐந்து பேருடன் வண்டியில் ஏறி புறப்பட்டான்..."பரசுராமனாகிய நான் " மறுபடியும் மனதில் ஒலிக்கத் தொடங்கியது....
Comments
Post a Comment