அப்பா, முதுமை, மரணம்
ஐந்து வயதில் அப்பா இறந்துபோனால் அப்படி அழும் பிள்ளை, தன் அறுபது வயதில் எண்பது வயது தந்தை இறக்கும் போது அவ்வளவு கலங்காதது ஏன்?. அப்பாவின் முக்கியத்துவம் குறைந்து விட்டதோ? காசும், பணமும், சுற்றமும், நட்பும் அப்பாவின் முக்கித்துவதை குறைத்து விட்டது. இந்த பாசம், நேசம் எல்லாம் பொய்யோ? நினைத்து பாருங்கள் உங்கள் ஐந்து வயது முதல் மீசை முளைத்து "எல்லாம் எனக்கு தெரியும் " என்று சொல்ல ஆரம்பித்த நாள் வரை.. அப்பா எப்போ வீடு திரும்புவார் என்று காத்திருந்த மாலை நேரங்கள், உலகத்தில் எல்லாம் வல்ல வீரனாய் அப்பாவை நினைத்து இருந்த நாட்கள்.. இதுதான் இயற்கை, இங்கு எல்லாம் தேவைகள் பொருட்டே, அப்பா, அம்மா, பாசம் நேசம், நண்பன், மனைவி, மக்கள், அரசு எல்லாம் ஒருவர் தேவை மற்றவர் பூர்த்தி செய்யும் வரைதான். இது புரியாமல் தான் நாம் மிகவும் குழப்பமுருகிறோம்.
எனக்கும் இப்போது ஐம்பது வயது, என் தந்தையிடம் பேசி ஒரு வாரம் ஆகிறது.
மருந்து, மாத்திரை, வேளைக்கு உணவு, உடை, நல்ல இருப்பிடம், இதை எல்லாம் கொடுப்பதோடு எல்லாம் முடிந்து விடுகிறது.
இதை எல்லாவற்றையும் மீறி என்னால் ஏன் மீண்டும் அந்த பத்து வயது சிறுவன் போல்
பேசமுடியவில்லை. இன்னும் என்னை விட முப்பது வயது மூத்தவர் தான் என் தந்தை.
கம்ப்யூட்டரும், செல் போனும் அந்த கிழவருக்கு புரியவில்லை. என்னுடைய பத்து வயதில் கணக்கும், அறிவியலும் தெரியாமல் முழித்தபோது என் தந்தை என்னை அலட்சியப்படுத்தவில்லையே? நான் ஏன் இப்படி நன்றி இல்லாமல் இருக்கிறேன். ?
நிச்சயமாக புரியவில்லை..
இது எனக்கும் நடக்கும் என்று நினைக்கும் போது மிகவும் பயமாக உள்ளது. என்னுடைய முதுமை என் தந்தையின் முதுமையை விட கடுமையாக இருக்கும், தனிமை கொல்லும்.
காசும், பணமும் வேலைக்காது இங்கு. முதுமை இங்கே மிகப்பெரிய நோய். மரணம் ஒன்றே முதுமையின் மருந்து.
மரணம் பற்றி பயம் கொள்ள தேவையில்லை.
மரணம் பற்றிய சிந்தனை செய்ய வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ் ஒன்றாய் விட்டு விலகுதல் வேண்டும். கடமைகள் முடிந்த பின்னே மெதுவாய் விலக பழக வேண்டும்.
மௌனம் காக்க பழக வேண்டும். இளமை முதலே இல்லை என்றாலும் ஐம்பதிலிருந்தாவது முயற்சி செய்ய வேண்டும். வாழ்வதற்கு ஆயிரம் பயிற்சி நடக்கும் இந்த நாளில், மரணத்தை எதிர் கொள்வதற்கும் பயிற்சி அவசியம். என்னுடைய எண்பது வயது தந்தையை பார்க்கும்போது இந்த பயிற்சி மிக அவசியம் என்று தோன்றுகிறது. இந்த வயதிலும் ஓயாத பேச்சு, அலைச்சல் ஆகியவற்றை நோக்கும்போது மிகவும் பாவமாக உள்ளது.
மரணம் ஒன்றே மிகவும் நிச்சயமானது.
I simply adore your point of view, but our society has taught us and developed the tendency we all fallow , that is to chase /acquire unlimited amount of money, top position, top status, more more wealthy. In this fast world, we miss human value, we forget so many things. Its not that we don't have kindness or feelings but we miss to prioritize it.
ReplyDelete