மரணம், இறைவன்
ஒவ்வொரு மூச்சும் புதிய பிறப்பு
ஒவ்வொரு மூச்சும் புதிய இறப்பு
நேற்றும் இல்லை நாளையும் இல்லை
இன்று என்பது நிரந்தரம் இல்லை
அழிவு இன்றி ஆக்கம் இங்கில்லை
அமைதி காக்க மரணம் அவசியம்
மரணம் காக்க யுத்தம் அவசியம்
அமைதியும், யுத்தமும் அண்ணன் தம்பி
மரணம் பெற்ற இரட்டை பிறவி.
ஆறாம் அறிவால் அவஸ்தைகள் அதிகம்.
ஆறாம் அறிவால் ஆனது என்ன?
கடவுள் படைத்தோம், மரணம் மறக்க.
மரணம் நம்மை மறக்கவில்லை
இதுவரை நம்மிடம் தோற்கவில்லை.
ஆயிரம் ஆயிரம் கோவில்கள் செய்தோம்
காலம் வென்ற கோட்டைகள் செய்தோம்
கோட்டையும், கோவிலும் நின்றது இங்கே
கோட்டையும் கோவிலும் செய்தவன் எங்கே?
எதுவும் இங்கே நிரந்தரம் இல்லை
நமதென்று இங்கே எதுவுமில்லை
கடனாய் உடம்பு, கடனாய் மூச்சு
கடனாய் காதல், கடனாய் காமம்
கடனாய் கடவுள், கடனாய் ஞானம்
வீரம், வெற்றி, எல்லாம் கடன்தான்
வீணே இந்த அலட்டல் எதற்கு
கோபம் குறைப்போம், அன்பை வளர்ப்போம்
அமைதியாக அன்பு செய்வோம்
அன்பு மட்டுமே தேவை இங்கு
கற்பிதங்களை களைதல் நன்று.
மாற்றத்தோடு மாறுதல் நன்று.
மாற்றம் முதலில் மதங்களில் வேண்டும்.
மதம், மனிதனை பிடித்த மதம்.
உழைப்பை குறைத்து, சோம்பலை வளர்த்து,
தன்நம்பிக்கையை மெதுவாய் தகர்க்கும்
தாடி சாமியாரின் செல்வம் வளர்க்கும்
மனிதனை இன்னும் மடையனாக்கும்
மதமும், சாமியும் மாத்திரை போல
வலிகளுக்கேற்ப மாத்திரை மாறும்
தேவைகளுக்கேற்ப பிரார்த்தனை மாறும்
கோவிலில், மதத்தில் கடவுள் இல்லை
பூசையும், பஜனையும் தேவை இல்லை
இறைவன் என்பவன் எங்கும் இருப்பவன்
மனிதருக்குள்ளே ஒளிந்து கிடப்பவன்
மதங்களை கொஞ்சம் மறந்து பார்ப்போம்.
வாழ்கையை முறையாய் வாழ்ந்து பார்ப்போம்.
இன்னும் கொஞ்சம் உழைத்து பார்ப்போம்.
புத்தியை கொஞ்சம் உயர்த்தி பாப்போம்.
இறைவனை அன்பால் தேடிப் பார்ப்போம்
பசிக்கும் போது உணவாய் இறைவன்
கலவியினால் வரும் காமம் இறைவன்
நோய்க்கான மருந்தாய் இறைவன்
செய்யும் தொழிலில் நேர்த்தி இறைவன்
உடுத்தும் உடையின் அழகு இறைவன்
கன்னிப்பெண்ணின் கண்ணில் இறைவன்
எண்பது வயது முதுமையில் இறைவன்
வெற்றி தோல்வி இரண்டிலும் இறைவன்
இயற்கை முழுதும் நிறைந்தவன் இறைவன்
எல்லா புதிய முயற்சியும் இறைவன்
இயங்கும் எல்லாவற்றிலும் இறைவன்
கேள்வி பதில் இரண்டிலும் இறைவன்
ஒன்று பலதாய் ஆனது இறைவன்
எல்லாம் ஒன்று சேர்வது இறைவன்.
Excellent. Well written, very thoughtfully..
ReplyDeletethx for your feedback
Delete